மக்காச்சோளம் கதிர் அடிக்கும் எந்திரம் மோதி பெண் பலி
மக்காச்சோளம் கதிர் அடிக்கும் எந்திரம் மோதி பெண் உயிரிழந்தார்.
மங்களமேடு:
அறுவடை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பொன்னகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 33). குமார் மொரீஷியஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மோனிஷா(11) என்ற மகள் இருக்கிறாள். அவள் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
ஜெயக்கொடி விவசாயம் பார்த்து வந்தார். நேற்று மாலை ஜெயக்கொடியின் வயலில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கதிர் அடிக்கும் எந்திர வாகனம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அப்போது எந்திரத்தின் பின்னால் விழுந்த மக்காச்சோள கதிர்களை ஜெயக்கொடி எடுத்து வந்துள்ளார்.
சாவு
இந்நிலையில் டிரைவர், வாகனத்தை பின்னால் இயக்கியபோது ஜெயக்கொடி மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் மீது சக்கரம் ஏறிச்சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் நின்றவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள முருகன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அறுவடை எந்திர வாகன டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.