நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் பலி; 5 பேர் படுகாயம்
திருமண முகூர்த்தத்துக்கு பட்டுப்புடவை எடுக்க வந்தபோது நாட்டறம்பள்ளி அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் வந்தனர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு விநாயகா படவானா வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 44). திருமணத்துக்கு பட்டுப்புடவை வாங்குவதற்காக இவர்கள் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு காஞ்சீபுரத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் பெங்களூரு தாவணகெரே பகுதியை சேர்ந்த சீனிவாசன், இவரது மனைவி பார்வதி (50), வெங்கடரெட்டி மனைவி சுப்பம்மா (60), பிரபாகரன் மனைவி சரஸ்வதி (45) மற்றும் நித்தியா நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசா ரெட்டி, இவரது மனைவி கீர்த்தனா (42) ஆகியோரும் வந்தனர்.
காரை பெங்களூரு விநாயகா நகர் பகுதியைச் சேர்ந்த கரப்பா மகன் பீமாசாரி (35) ஒட்டி வந்தார்.
இவர்களது கார் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பங்களா மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஓடி தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் கீர்த்தனா காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 4 பெண்கள் மற்றும் டிரைவர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக பார்வதி மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரை கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, பலியான கீர்த்தனா உடலை பிரேத பரிசோதனைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.