கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் சாவு
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தார். தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் பணம் வழங்காததால் விபரீத முடிவு எடுத்தார்.
பெண் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த ரமேசின் மனைவி தீப லட்சுமி (வயது 35). இவர் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதில் அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக வந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி மாலை தீப லட்சுமி விஷம் குடித்து மயங்கினார்.
வளாகத்தில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தீபலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கமிஷன் வழங்கப்படவில்லை
கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-
தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் தீப லட்சுமி ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டுள்ளார். இதில் வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பணம் முதலீடு செய்தவர்கள், தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர் தனியார் நிறுவனத்திடம் கமிஷன் தொகையை கேட்டிருக்கிறார். ஆனால் அவா்கள் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு
இதற்கிடையில் தனியார் நிறுவனத்தில் இருந்து உரிய கமிஷன் தொகையை தீபலட்சுமி மட்டும் பெற்று வந்த நிலையில் தான் சேர்த்து விட்டவர்களுக்கு கமிஷன் தொகையை வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
தனியார் நிறுவனத்தில் முதலீடு திட்டத்தில் பணம் வழங்காத நிலையில் விபரீதமாக முடிவு எடுத்து விஷம் குடித்து பெண் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.