சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்த பெண் சாவு
சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்
அய்யலூர் அருகே உள்ள செம்பன் பழனியூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள பால் பண்ணையில் ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி நந்தினி (30). இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த மாதம் 30-ந்தேதி இவர்களுக்கு திருமண நாள் என்பதால் வேல்முருகன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடவூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வேல்முருகன் ஓட்டிச்செல்ல நந்தினி பின்னால் அமர்ந்து சென்றார்.
கடவூர் சாலையில் வளவிசெட்டிபட்டியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நந்தினியின் கழுத்தில் இருந்த துப்பட்டா, மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறிய நந்தினி, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேல்முருகன் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.