டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து பெண் பலி; 15 பேர் படுகாயம்
கலசபாக்கம் அருகே டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கடலாடி காலனி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 28). இவர், டிராக்டரில் டிப்பர் இணைக்கப்பட்டு அதன் மூலம் 15 பெண்களை ஏற்றிக்கொண்டு போளூர் அருகே உள்ள முருகாபாடியை அடுத்த ஒகூர் பகுதியில் புல் அறுப்பதற்காக அழைத்து சென்றார்.
கடலாடியில் இருந்து போளூர் செல்லும் பைபாஸ் சாலையில் வ.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது டிராக்டரின் பின்புறம் இருந்த டிப்பர் திடீரென நிலைத்தடுமாறி தலைகீழாக சாலையோரம் கவிழ்ந்தன.
இதில் டிப்பரில் அமர்ந்து வந்த 15 பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி (50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் டிரைவர் சூர்யா மற்றும் 14 பெண்களை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.