பெண்ணுக்கு பிரசவம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தஞ்சை ரெயில் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தஞ்சை ரெயில் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வரும். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடைக்கு வந்தது. அந்த ரெயிலில் பயணம் செய்த அரியலூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் திண்டுக்கல் செல்வதற்காக தனது சகோதரனுடன் வந்தார்.
பிரசவ வலி
தஞ்சை ரெயில் நிலையத்திற்கு ரெயில் வருவதற்கு முன்பாகவே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் வந்ததும் மேலும் பிரசவ வலி அதிகரித்ததால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை ரெயிலில் இருந்த சக பயணிகள் உதவியோடு ரெயில் நிலையத்தில் கீழே இறக்கினர்.
பெண் குழந்தை பிறந்தது
தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ்காரர்கள் ரமணி, கோகிலா மற்றும் தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை அளிக்கும் நர்சு விஜயசாந்தி ஆகியோர் அந்த பெண்ணுக்கு 3-வது நடைமேடையிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு அதிகாலை 5.25 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நாயக், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும் தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
அதிகாரிகள் பாராட்டு
உரிய நேரத்தில் பெண்ணுக்கு சுக பிரசவம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் நர்சு ஆகியோரின் சேவையை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அங்கிருந்த சக பயணிகள் பாராட்டினர்.