இரும்பு ராடால் அடித்து பெண் கொலை


இரும்பு ராடால் அடித்து பெண் கொலை
x

சோளிங்கர் அருகே இரும்பு ராடால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் அருகே இரும்பு ராடால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அடித்துக்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே தகர குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி (வயது 32). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கவுதமி ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று கவுதமி மற்றும் அதே ஊரை சேர்ந்த சோனியா, கோமலா ஆகிய 3 பேரும் தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு தகரகுப்பம் பஸ் நிலையத்தில் இருந்து ஒட்டனேரிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கவுதமியின் தங்கை பிரியாவின் கணவர் சஞ்சீவிராயன் (28) அங்கு வந்தார்.

அவர் கவுதமியை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் கருங்கல்லால் கவுதமியை தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாக்குவாதம்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா, கோமளா ஊருக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் ஊர் மக்கள் அங்கு வந்தபோது, கொலை செய்த சஞ்சீவிராயன் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சுரேஷ், ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்தனர்.

அப்போது ஊர் பொதுமக்கள் கொலை செய்த சஞ்சீவிராயனை கைது செய்யாமல் பிணத்தை எடுக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரேஸ் யாதவ் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய சஞ்சீவிராயனை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story