மலை உச்சியில் இருந்து பாறை இடுக்கில் தள்ளி பெண் கொலை
வேலூரை அடுத்த பாலமதி மலை உச்சியில் கீழே தள்ளிவிட்டு ்பெண் கொலை செய்யப்பட்டார். அவர் சிதம்பரத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் பிணம்
வேலூரை அடுத்த பாலமதி மலைஉச்சியில் குழந்தை வேலாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து 100 அடிக்கு கீழே பாறை இடுக்கு பள்ளத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. நேற்று காலை அந்த பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணைைய தொடங்கினர்.
பிணமாக கிடந்த பெண் பிரவுன் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தார். அவரது முகம் சிதைந்து காணப்பட்டதோடு விகாரமாக வீக்கத்துடன் இருந்தது.
அவர் விழுந்த இடத்தின் அருகே உள்ள பாறைகளில் ஆங்காங்கே ரத்தம் காணப்பட்டது. இறந்த பெண் குறித்து போலீசார் பாலமதி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விசாரித்தனர். ஆனால் எந்த விவரமும் கிடைக்கவில்லை.
2 தனிப்படைகள் அமைப்பு
சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து பெண்ணின் உடலை போர்வை, சேலையால் சுற்றி போலீசார் ஆம்புலன்சுக்கு ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலமதி மலையடிவாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பெண்ணின் உருவம் மற்றும் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டுபிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ரஜினிகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாலமதி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரத்தை சேர்ந்த பெண்
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாலமதி மலையில் இறந்த இளம்பெண் யார் என்று தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் விவரங்கள், புகைப்படங்களை போலீஸ் நிலையங்களில் சேகரித்தோம்.
அதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும், இறந்து போன பெண்ணின் புகைப்படமும் ஒரே மாதிரியாக உள்ளது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேலூருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் பெற்றோர் உடலை பார்வையிட்டு உறுதி செய்ய உள்ளனர்.
பாலமதி மலை உச்சியில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம். அல்லது இளம்பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மர்மநபர்கள் கொலை செய்து விட்டு பின்னர் மலை உச்சியில் இருந்து உடலை கீழே தூக்கி வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். மலை உச்சியில் இருந்து கீழே வீசியதில் பெண்ணின் முகம் கல்லில் அடிப்பட்டு சிதைந்து வீங்கியிருக்க வாய்ப்புள்ளது. அவரின் கழுத்திலும் லேசான காயம் இருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் கொலை செய்யப்பட்டு மலை உச்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டாரா? அல்லது மலையில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரிய வரும் என்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.