ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக பலியானார்.
ஒட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பருத்தி விவசாயம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சரவணசெல்வி (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது சிவகுமார் தனது குடும்பத்துடன் கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் வசித்து வருகிறார். சங்கம்பட்டியிலுள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி பயிரிட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக பருத்தி அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
மின்னல் தாக்கியது
இதையடுத்து சரவணசெல்வி சங்கம்பட்டிக்கு வந்து நேற்று மாலையில் தங்களது நிலத்தில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பகுதியில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் வயலில் இருந்து சரவணசெல்வி வெளியேற முயன்றுள்ளார். அப்போது திடீரென சரவணசெல்வி மீது மின்னல் தாக்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சரவணசெல்வி இறந்து கிடந்துள்ளார்.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து மணியாச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.