கோபி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது லாரி மோதி பெண் பலி; கணவர் படுகாயம்
கோபி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது லாரி மோதி பெண் பலியானார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.
கடத்தூர்
கோபி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது லாரி மோதி பெண் பலியானார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.
விபத்து
கோபி அருகே உள்ள மல்லிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி லோகநாயகி (60). இவர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் ஆறுமுகமும், லோகநாயகியும் நேற்று மதியம் ஸ்கூட்டரில் மல்லிபாளையத்தில் இருந்து கோபி நோக்கி சென்று கொண்டிருந்தனர். கொளப்பலூர் ேராட்டில் மொடச்சூர் என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக திருப்பூரில் இருந்து கொடிவேரிக்கு சென்று கொண்டிருந்த லாரியும், ஆறுமுகம் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
பெண் சாவு
இந்த விபத்தில் 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பாிசோதித்துவிட்டு லோகநாயகி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்த ஆறுமுகம் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த வேதாரண்யத்தை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (30) மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.