குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த பெண் சாவு


குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த பெண் சாவு
x

அருமனை அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

அருமனை,

அருமனை அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்ப தகராறு

அருமனை அருகே உள்ள அண்டுகோடு ஈந்திகாலையை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி சகி (வயது38). இவர்களுக்கு சாய் கிருஷ்ணா (10) என்ற மகள் உண்டு. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், இருவரும் ஒரே வீட்டில் தனி தனியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சகியும், அவரது மகள் சாய் கிருஷ்ணாவும் தனி அறையில் தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிஷோரின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

தீயில் கருகி சாவு

அப்போது சகி மற்றும் அவரது மகள் படுத்திருந்த அறையில் இருந்து தீ பற்றி எரிந்து புகை வந்து கொண்டிருந்தது. உடனே பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சகி உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். சிறுமி சாய் கிருஷ்ணா தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே பொதுமக்கள் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சகியின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக சகி மகளுடன் தீக்குளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடைேய படுகாயமடைந்த சகியின் மகள் சாய் கிருஷ்ணாவுக்கு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப தகராறு காரணமாக மகளுடன் தீக்குளித்த பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

------------

(படம் உண்டு)

சகி


Next Story