மழை வெள்ளத்தில் சிக்கி பெண் பலி


மழை வெள்ளத்தில் சிக்கி பெண் பலி
x

கோத்தகிரியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வீடு திரும்பியபோது மழை வெள்ளத்தில் சிக்கி பெண் பலியானார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வீடு திரும்பியபோது மழை வெள்ளத்தில் சிக்கி பெண் பலியானார்.

கொட்டித்தீர்த்த மழை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல்தொரை, மசக்கல், தீனட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த மழை கொட்டியது. 3.30 மணிக்கு தொடங்கிய மழை 5 மணி வரை 1½ மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்தது.

இதற்கிடையில் அங்குள்ள ஓடையில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கினார்

அந்த சமயத்தில் தீனட்டி கிராமத்தை சேர்ந்த ஹாலம்மாள்(வயது 55) என்பவர், அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். மழை தீவிரம் அடைந்ததால், பணியை கைவிட்டுவிட்டு தனது வீட்டுக்கு செல்ல அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றார்.

அப்போது திடீரென மழை வெள்ளம் மிக வேகமாக பெருக்கெடுத்து ஓடியது. நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அதில் சிக்கிய ஹாலம்மாள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடினர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் இன்று காலையில் அங்குள்ள சாலையோர முட்புதரில் ஹாலம்மாள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இது குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story