மாட்டுக் கொட்டகை மீது மரம் விழுந்ததில் பெண் பலி
ஆம்பூர் அருகே மாட்டுக் கொட்டகை மீது மரம் விழுந்ததில் பெண் பலியானார்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சம்பவத்தன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்தநிலையில் பாலூர் அடுத்த பட்டுவாம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சரஸ்வதி (வயது 47) என்பவர் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் நின்றுகொண்டிருந்தார். இந்த நேரத்தில் பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மரம் கொட்டகை மீது விழுந்தது. இதில் கொட்டகையில் நின்று கொண்டிருந்த சரஸ்வதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.