கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி: தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது- விடுதிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை


கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். அனுமதியின்றி அழைத்துச்சென்றதாக தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி

கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். அனுமதியின்றி அழைத்துச்சென்றதாக தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லட்டி மலைப்பாதையில் விபத்து

ஊட்டி-கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் மிகவும் செங்குத்தான வளைவுகள் இருப்பதால் தொடர் விபத்துகள் நடந்து வந்தன. இதனால் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்தனர். இவர்கள் ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு சுற்றுலா வேனில் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றனர். இந்த சுற்றுலா வேன் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

பெண் பலி

இந்த விபத்தில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கவனித்த இதுபற்றி புதுமந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சென்னையில் வசித்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (வயது 45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

மீதமுள்ள 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக வேனில் சுற்றுலா பயணிகளை அழைத்துச்ெசல்ல ஏற்பாடு செய்தது விடுதி உரிமையாளரான சென்னை சேர்ந்த வினோத்குமார் (வயது 24) மற்றும் அவரது உதவியாளரான கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் (26) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் கல்லட்டி பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே செயல்பட்டு வந்த அந்த விடுதியை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் உரிய அனுமதியின்றி விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டி நடவடிக்கை எடுத்தனர்.


Next Story