கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள குட்டிமணி நகரைச் சேர்ந்த நாகமுத்து என்பவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 67). கூலித் தொழிலாளி. இவர் வழக்கம் போல அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இலைப் பறிக்கும் பணியிலிருந்துள்ளார். அப்போது தேயிலைத் தோட்டத்திற்குள் படுத்திருந்த காட்டெருமை ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென அவரைத் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். வலிதாங்க முடியாமல் தவித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த கட்டபெட்டு வனசரகர் செல்வகுமார், வனக்காப்பாளர் நாகேஷ் உள்பட வனத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த பெண் தொழிலாளிக்கு ஆறுதல் கூறினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.