தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை
பழனி அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டார்.
பெண் கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 28). கொத்தனார். இவரது மனைவி மாலதி (24). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவும் இவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திருமூர்த்தி, மனைவி என்றும் பாராமல் அங்கு கிடந்த கல்லை தூக்கி மாலதியின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கீேழ விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து திருமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார்.
கணவருக்கு வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் மாலதியின் தலையில் திருமூர்த்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொத்தனார் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.