நெல்லையில் மீட்கப்பட்ட பெண் 6 மாதத்துக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
நெல்லையில் மீட்கப்பட்ட பெண் 6 மாதத்துக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு மூதாட்டியை போலீசார் மீட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணுக்கு தெலுங்கு மொழி தவிர வேறு மொழி எதுவும் பேச தெரியாது. மேலும் சரியாக காது கேட்காமலும், சரியாக பேச முடியாமலும் இருந்தார். அந்த பெண்ணின் உறவினர்கள் குறித்து விசாரித்து வந்தனர். மேலும் அந்த பெண் பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் ஆகியோர் வழிகாட்டுதலுடன் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி சரவணன் தலைமையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியால் அந்த பெண் குறித்து ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த மாவட்ட கலெக்டர் வித்யா, அந்த பெண்ணின் உறவுகளை கண்டுபிடித்து வீடியோ அழைப்பு மூலமாக பேச வைக்கப்பட்டது.
இதில் அந்த பெண் விஜயநகரம் மாவட்டம் ராமபத்ரபுரத்தை சேர்ந்த புச்சிராஜு மனைவி சீதா ரத்னம் (வயது 87) என்பதும், கடந்த ஜூலை மாதம் திருப்பதியில் இருந்து விஜயவாடா நோக்கி ரெயிலில் சென்றபோது ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் இறங்கி வேறு ரெயிலில் சென்று விட்டதும் தெரியவந்தது. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரேணிகுண்டா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் நேற்று நெல்லைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் சீதா ரத்னம், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு வழியனுப்பி வைக்கப்பட்டார்.