பெண் போலீசிடம் நகை பறிப்பு
மதுரை ஆயுதப்படை குடியிருப்பு அருகே பெண் போலீசிடம் நகை பறித்துவிட்டு தப்பிய 2 பேரை தீவிரமாக தேடிவருகிறார்கள்
மதுரை ஆயுதப்படை குடியிருப்பு அருகே பெண் போலீசிடம் நகை பறித்துவிட்டு தப்பிய 2 பேரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
போலீசிடம் நகை பறிப்பு
மதுரையில், நத்தம் சாலை ரிசர்வ் லைன் ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவருடைய மனைவி வெள்ளியம்மாள்(வயது 31). இவர் மதுரை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமியின் முகாம் அலுவலகத்தில், போலீசாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பீ.பி.குளம் பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு, வெள்ளியம்மாள் தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். ஆயுதப்படை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றதும் வெள்ளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென பறித்தனர். அவர் சங்கிலியை பிடித்துக்கொண்டதால், கொள்ளையர்கள் கையில் 4 பவுனும், வெள்ளியம்மாள் கையில் 4 பவுனும் இருந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தப்பிச்சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். நகை பறித்தவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.