மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
ஏர்வாடி அருகே மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
வள்ளியூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பால்ராஜ் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி ராணி. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ராணி கணவரை பிரிந்து, ஏர்வாடி அருகே உள்ள சமாதானபுரம் காருண்யா நகரில் வசித்து வருகிறார். ஆசீர் பால்ராஜ், ராணி வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார். இதனை ராணி அதே தெருவில் வசிக்கும் பழனி மனைவி சுடலியம்மாளிடம் (48) கூறினார். இதையடுத்து சுடலியம்மாள், இதுகுறித்து ஆசீர் பால்ராஜை தட்டிக் கேட்டார். இதனால் தகராறு ஏற்பட்டதன் காரணமாக சுடலியம்மாளுக்கும், ஆசீர் பால்ராஜ்க்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று ராணியும், சுடலியம்மாளும் அங்குள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆசீர் பால்ராஜ், சுடலியம்மாளை வழிமறித்து கத்தியால் குத்தினார்.
இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசீர் பால்ராஜை கைது செய்தனர்.