பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல்
சிவகாசி அருகே கோவில் திருவிழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே கோவில் திருவிழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிருஷ்ணமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் கதிரேசன் (வயது 25) என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தட்டி கேட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
இதனால் ஆத்திரம் அடைந்த கதிரேசன், பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். மேலும் முகத்தில் அடித்ததால் சப்-இன்ஸ்பெக்டர் செல்விக்கு முகத்தில் வீக்க காயம் ஏற்பட்டுள்ளது. கதிரேசன் அவருக்கு மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. தான் தாக்கப்பட்டது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, உயர் போலீஸ்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். கோவில் திருவிழாவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதி போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.