தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிரசவித்த பெண் `திடீர்' சாவு; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு


தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிரசவித்த பெண் `திடீர் சாவு; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x

நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில், குழந்தை பிரசவித்த பெண் திடீரென இறந்தார். உறவினர்கள் அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் சொக்கட்டான்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். செண்டை மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். தமிழர் விடுதலை களம் நிர்வாகியாகவும் உள்ளார். இவருடைய மனைவி மகாராணி (வயது 25). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மகாராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாராணிக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை நெல்லை டவுன் கீழரதவீதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவு 8 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிது நேரத்தில் மகாராணியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் அவர் திடீரென இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அலெக்ஸ் மற்றும் மகாராணியின் உறவினர்கள் நேற்று காலை அந்த ஆஸ்பத்திரி முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகளும் திரண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மகாராணியின் உறவினர்கள் கூறுகையில், மகாராணியை பிரசவத்துக்கு அனுமதித்தபோது நல்ல ஆரோக்கியமாக இருந்தார். குழந்தை பிறந்தபோதும் நன்றாக இருந்தார். ஆனால் தொடர் பராமரிப்பு இன்றி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அப்போது சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை, செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து உள்ளனர். இதுவே அவரது சாவுக்கு காரணம் ஆகும். எனவே, ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.

அப்போது போலீஸ் அதிகாரிகள் தரப்பில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் போலீசார், மகாராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story