தக்கலை போலீஸ் நிலைய கழிவறையில் பெண் தற்கொலை முயற்சி;திருட்டு வழக்கில் கைதானவர்


தக்கலை போலீஸ் நிலைய கழிவறையில் பெண் தற்கொலை முயற்சி;திருட்டு வழக்கில் கைதானவர்
x

திருட்டு வழக்கில் கைதான பெண் தக்கலை போலீஸ் நிலைய கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

தக்கலை,

திருட்டு வழக்கில் கைதான பெண் தக்கலை போலீஸ் நிலைய கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் கைது

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 37). இவர் நேற்று முன்தினம் மதியம் தக்கலை பஸ் நிலையத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது கழுத்தில் கிடந்த நகையை ஒரு பெண் பறிக்க முயன்றார். ஆனால் சாந்தகுமாரி அவருடைய கையை தட்டி விட்டதால் நகை பறிக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அதே சமயத்தில் சாந்தகுமாரியின் கையில் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்து விட்டு அவர் தப்பி ஓடினார். இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் மணலியில் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் மதுரை அப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி முத்துமாரி (35) என்பதும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் இறந்ததும் தெரியவந்தது.

குமரி மாவட்டத்தில் பல இடங்களில் முத்துமாரி திருடி வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையில் ஈடுபட்டனர்.

போலீஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி

அப்போது அந்த பெண்ணின் கைரேகையை பதிவு செய்வதற்கான பணியில் மகளிர் போலீசார் கவிதா, ஷீபா ஆகியோர் ஈடுபட்டிருந்த போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் அங்கு சென்ற அவர் திடீரென பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதுதொடர்பாக முத்துமாரி மீது தற்கொலைக்கு முயன்றதாக மற்றொரு வழக்குப்பதியப்பட்டது. திருட்டு வழக்கில் கைதான பெண் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story