திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Sept 2023 2:30 AM IST (Updated: 19 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதற்கிடையே நேற்று அரசு விடுமுறை என்பதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. எனினும் ஒருசிலர் மனு கொடுக்க வந்து திரும்பி சென்றனர். அதன்படி நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பெண் மனு கொடுக்க வந்தார். பின்னர் திடீரென அவர் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து மீட்டனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பழனியை அடுத்த பெரியகலையம்புத்தூரை சேர்ந்த முருகேசன் மனைவி வசந்தி (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story