மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
அந்தியூர் எண்ணமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 28). இவர் நேற்று தனது 1½ வயது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகில் சென்றதும் திடீரென மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலிலும், மகன் தருண்தேவ் உடலிலும் ஊற்றிக்கொண்டார். தீக்குளிக்க முயன்றதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஓடிச்சென்று மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினார்கள்.
அதன்பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் பிரேமா கொடுத்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-
நானும், அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியரின் மகன் சந்தோஷ் நவீன் (30) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களுடைய காதலுக்கு சந்தோஷ் நவீன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி ஏற்காட்டில் திருமணம் செய்து கொண்டோம். அதன்பிறகு எண்ணமங்கலத்தில் குடும்பம் நடத்தி வந்தோம்.
கொலை மிரட்டல்
எனது கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால், நாங்கள் அங்கு சென்றோம். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது கணவர் எம்.பி.ஏ. தேர்வு எழுத செல்வதாகவும், தேர்வு முடிந்த பிறகு தனது பெற்றோருடன் பேசி என்னை அழைத்து செல்வதாகவும் கூறினார். இதனால் நான் எனது தாய் வீட்டில் வசித்து வந்தேன். ஆனால் எனது கணவர் என்னை வந்து கூப்பிட்டு செல்லவில்லை. இதுதொடர்பாக அவரிடம் சென்று கேட்டதற்கு என்னை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையில் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து சந்தோஷ் நவீன் மீது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். இந்த புகார் மனு பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
2-வது திருமணம்
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு எனது கணவரின் வீட்டுக்கு சென்று என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவரும், அவரது பெற்றோரும் என்னை தகாத வார்த்தையால் பேசி திட்டி அனுப்பி விட்டனர்.
இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி எனது கணவர் சந்தோஷ் நவீனுக்கும், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், மீண்டும் எனது கணவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை ஏமாற்றிவிட்டு 2-வதாக திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.