ஓமலூரில் நடந்த ஜமாபந்தியில் மண்எண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி-கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக புகார்
ஓமலூரில் நடந்த ஜமாபந்திக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார்.
ஓமலூர்:
மூதாட்டி
ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில் ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த மூதாட்டி பாப்பா (வயது 68), இவருடைய மகன் சசிகுமார் ஆகியோர் மனு கொடுக்க வந்தனர். அப்போது மூதாட்டி வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் மண்எண்ணெய் கேன் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மூதாட்டி பாப்பா ஜமாபந்தி அலுவலர் ராஜா, தாசில்தார் புருஷோத்தமனிடம் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கொலை மிரட்டல்
அதில் ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியில் கூட்டுபட்டாவின் கீழ் எனது பெயரில் 40 சென்ட் நிலம் உள்ளது. தற்போது அந்த பட்டாவில் என்னுடைய பெயர் நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுகிறார். எனது நிலத்தை மீட்டு தரவேண்டும். அல்லது நான் தற்கொலை செய்து கொள்வேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக கூறி, ரத்த காயத்துடன் மூதாட்டி பாப்பா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். மேலும் அவர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளி தர்ணா
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவருடைய பூர்வீக சொத்தை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் நேற்று எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமுக்கு கையில் பதாகையை ஏந்தியபடி வந்தார்.
அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் நிலத்தை மீட்டு தரவேண்டும், இல்லையேல் சாவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாரியப்பனின் தந்தை 1962-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிலத்தை விற்பனை செய்துள்ளதாக உறவினர்கள் ஆவணம் வைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுஎன்றனர்.