மூதாட்டியிடம் நகை பறித்த பெண், கள்ளக்காதலனுடன் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த பெண், கள்ளக்காதலனுடன் கைது
x

பெண்ணாடம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 65). இவரது கணவர் இறந்து 6 ஆண்டு ஆகிறது. இவரது மகன் சுரேஷ், மகள் சுதா ஆகியோர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

ஜெயலட்சுமி மட்டும் சொந்த ஊரான மாளிகை கோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், தனக்கு பசிப்பதாகவும், உணவு தருமாறும் கூறினார்.

நகையை பறித்து ஓட்டம்

இதை நம்பி, ஜெயலட்சுமியும் வீட்டில் இருந்த சப்பாத்தியை கொடுத்தார். அப்போது அந்த பெண் திடீரென ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். இதை பார்த்ததும் அந்த பெண்ணுக்காக மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த ஒருவர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றார்.

கள்ளக்காதலனுடன் பெண் கைது

இதையடுத்து அந்த பெண், பெண்ணாடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை(34) என்பதும், தனது கள்ளக்காதலான பெண்ணாடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மெக்கானிக் உசேன்(42) என்பவருடன் சேர்ந்து மூதாட்டியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாஞ்சாலையையும், உசேனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நகையும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story