கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரக்குழந்தைகளுடன் பெண் பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரக்குழந்தைகளுடன் பெண் பலி
x

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரக்குழந்தைகளுடன் பெண் பலியானார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 37). இவர் சென்னையில் தனியாக தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜிஸ்ரீ. இவர்களுக்கு வினோதினி (13), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், கிருஷ்ணராஜ் (8) என்ற மகனும் இருந்தனர். இதில் வினோதினி 7-ம் வகுப்பும், ஷாலினி 5-ம் வகுப்பும், கிருஷ்ணராஜ் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜிஸ்ரீ தனது அண்ணன் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக தென்களவாயில் இருந்து குடும்பத்துடன் கடந்த 30-ந்தேதி திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும், அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் புஷ்பராணி (60) வீட்டில் தங்கியிருந்தார்.

4 பேர் பலி

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் புஷ்பராணி குளிப்பதற்காக தனது பேரக்குழந்தைகள் 3 பேரையும் பெருமுக்கலில் இருந்து கீழ்அருங்குணம் செல்லும் சாலையில் உள்ள கல்குவாரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 80 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையின் கரையில் புஷ்பராணி அமர்ந்து துணி துவைத்து விட்டு, குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குட்டையில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்து செய்வதறியாது திகைத்த புஷ்பராணி, பேரக்குழந்தைகள் 3 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தார். இதில் அவரும் தவறி விழுந்ததில் 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story