பெண் சரமாரி வெட்டிக்கொலை -அண்ணன் வெறிச்செயல்


பெண் சரமாரி வெட்டிக்கொலை -அண்ணன் வெறிச்செயல்
x

குடும்ப தகராறில் பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் விமல் (வயது 34). இவரது மனைவி செல்லப்பிரியா (32). இந்த தம்பதிக்கு சுருதி என்ற மகள் உள்ளார். விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விடுதலையான அவர் கருநாக்கமுத்தன்பட்டியில் மனைவி செல்லப்பிரியாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லப்பிரியா, விமலுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விமல் செல்லப்பிரியாவை செருப்பு மற்றும் கையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் விமல் செல்லப்பிரியாவின் அண்ணன் செல்லப்பாண்டியுடன் (36) வீட்டிற்கு வந்தார்.

பெண்ணுக்கு சரமாரி வெட்டு

அப்போது செல்லப்பாண்டி, செல்லப்பிரியாவிடம் ஒழுங்காக கணவருடன் வாழுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதில் கோபமடைந்த செல்லப்பிரியா "உன் வேலையை பாரு, எனக்கு நீ புத்திமதி சொல்லாதே" என சத்தம் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி அரிவாளை எடுத்து வந்து வீட்டிற்குள் இருந்த செல்லப்பிரியாவின் கூந்தலை பிடித்து வெளியே இழுத்து வந்தார்.

பின்னர் அவரது பின்கழுத்து பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் செல்லப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டதும் செல்லப்பாண்டி, விமல் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய செல்லப்பாண்டி, அவருக்கு உடந்தையாக இருந்த விமல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story