குடும்ப தகராறில் பெண் கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
குடும்ப தகராறில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபர்(வயது 50). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரியாஷ் (44). இவர்களுக்கு ஷேக்சவூத் (25) என்ற மகனும், சேக்பீட்சா (22) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு சென்று வசிக்கலாம் என்று ரியாஷிடம், ஜாபர் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு ரியாஷ் மறுத்ததோடு, ஜெயங்கொண்டத்தில் உள்ள வீட்டில் போதிய வசதியை செய்து கொடுத்தால், அங்கு குடியிருக்க செல்லலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கழுத்தை அறுத்து கொலை
மேலும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ஜாபர், ரியாஷிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜாபர் வீட்டில் இருந்த மகனையும், மகளையும் வெளியேற்றிவிட்டு கதவை பூட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் வீட்டிற்குள் இருந்த ரியாஷை தான் மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்ததோடு, நெஞ்சில் குத்தியுள்ளாா். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபரை கைது செய்தனர்.