தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட பல்வேறு நபர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது; ரூ.2¾ லட்சம் பறிமுதல்
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட பல்வேறு நபர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2¾ லட்சம் திருட்டு
ஊத்தங்கரை முல்லை நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனியார் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி ராமலிங்கம் அங்குள்ள வங்கி ஒன்றில் தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அதனை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் சாலையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ஆடிட்டர் அலுவலகத்துக்கு அவர் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். அதேபோல் பல்வேறு நபர்களும் தாங்கள் வைத்திருந்த பணம் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.
பெண் சிக்கினார்
இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது யார்? என கண்டறிய ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் பேச்சு கொடுப்பதுபோல் நடித்து, கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி நந்தினி (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட பல்வேறு நபர்களிடம் திருட்டில் ஈடுபட்டதை ஒத்துகொண்டார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.