குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள சிறைகுளம் வடக்கு கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். தண்ணீர் வேண்டும்... தண்ணீர் வேண்டும்.. என்று கோஷமிட்டபடி காலிகுடங்களை ஏந்தியபடி சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சிறைகுளம் வடக்கு கிறிஸ்துநகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்களுக்கு 15 ஆண்டுகளாகியும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் தண்ணீருக்காக பலகிலோ மீட்டர் தூரம் சென்று எடுத்து வருகிறோம். டிராக்டர், லாரிகளில் வரும் குடிநீரை குடம் ஒன்று ரூ.15 கொடுத்து வாங்கி குடித்து வருகிறோம். எங்களின் வருமானம் அனைத்தும் குடிநீருக்கே காலியாகி விடுகிறது.

எங்கள் பகுதியை சுற்றிலும் உள்ள குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் கோடை வெயில் காரணமாக வற்றிவிட்டது. தண்ணீர் இல்லாததால் குழந்தைகள் குளிக்காமலே பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பெண்கள் காலி குடங்களை ஏந்தி போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதுகுளத்தூர் அருகே மறியல்

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமானாங்கரை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழ்நிலையில் அங்கு கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வராததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதுகுளத்தூர்-பரமக்குடி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story