ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அடுத்த பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 3- வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் பல நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.

எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும் என்று 3வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மா சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் ஊராட்சியில் பணம் இல்லை என கூறி நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி அப்பகுதி மக்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

அம்பலூர் போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் துரை ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடைந்த குடிநீர் குழாயை 2 நாட்களுக்குள் சீர் செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story