கடலாடியில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
கடலாடியில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சாயல்குடி
கடலாடியில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
கடலாடி ஒன்றியம் மாரந்தை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி குடிநீர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரந்தை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் காலிக்குடங்களுடன் கடலாடி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து அறிந்த ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதிஅளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.