பூட்டிய வீட்டிற்குள் ரத்தகாயங்களுடன் பெண் பிணம்
பூட்டிய வீட்டிற்குள் ரத்தகாயங்களுடன் பெண் பிணம்
பல்லடம்,
பல்லடம் அருகே பூட்டிய வீட்டிற்குள் ரத்த காயங்களுடன் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரத்த காயங்களுடன் பெண் பிணம்
பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் தனக்கு சொந்தமான வீட்டை ராஜா என்பவருக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வீடு பூட்டப்பட்டு இருந்தது. ேமலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்-பக்கத்தில் உள்ளவர்கள் வெள்ளியங்கிரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வாடகைக்கு வீடு கேட்ட ராஜாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அந்த வீட்டிற்கு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்தனர். பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கழுத்து மற்றும் தாடை பகுதியில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் 30 வயது மதிக்க தக்க ஒரு பெண் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொலையா?
சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால் பெண்ணின் உடல், முகம் போன்றவை வீங்கி இருந்தன. இதனால் அந்த பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? எப்படி இறந்தார் என தெரியவரும். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை? வீட்டை வாடகைக்கு எடுத்த ராஜா போலீசில் சிக்கினால்தான் இறந்து கிடந்த பெண் யார் என்ற விவரம் தெரியவரும். இதையடுத்து மர்ம சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள ராஜாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். பூட்டிய வீட்டிற்குள் பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.