பெண்கள் நினைத்தால் குழந்தைகளை கல்வியாளர்களாக மாற்ற முடியும்: போலீஸ் சூப்பிரண்டு


பெண்கள் நினைத்தால் குழந்தைகளை கல்வியாளர்களாக மாற்ற முடியும்: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் நினைத்தால் குழந்தைகளை கல்வியாளர்களாக மாற்ற முடியும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

பெண்கள் நினைத்தால் குழந்தைகளை கல்வியாளர்களாக மாற்ற முடியும் என ஆறுமுகநேரியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார்.

கருத்தரங்கம்

மேல ஆழ்வார்தோப்பை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிராம உதயம் அமைப்பின் சார்பில் ஆறுமுகநேரி கோசல் ராம் திருமண மண்டபத்தில் "இளம் பெண்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பொறுப்பான கடமைகள்" குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிராம உதயம் இயக்க நிறுவனர் வி.சுந்தரேசன், தூத்துக்குடி தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

தவறான முடிவு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

2021-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை மற்றும் கொலை மூலம் உயிரிழந்து உள்ளனர். ஏன், எதற்காக? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். தனது இன்னுயிரை மாய்க்க எப்படி ஒருவருக்கு மனம் வருகிறது. ஒரு கணம் யோசித்தால் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காது. இளம் பெண்கள் காதல் வயப்பட்டு பெற்றோரை உதாசீனப்படுத்தி சென்று விடுகிறார்கள். யார் மத்தியஸ்தம் செய்தாலும் அவர்கள் கேட்பதில்லை.

காதலனே கடவுள் என்று நினைக்கிறார்கள். ஓராண்டு காலம் கழித்து அதே பெண் தனது காதலை, காதலனை விட்டு விலக வேண்டும் என்று காவல்துறைக்கே வருகிறார். சின்ன சின்ன விஷயங்களை கூட தாங்க முடியாமல் எமோஷன் ஆவதால் தவறான முடிவை பெண்கள் எடுக்கின்றனர். நீங்கள் குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஊக்கம் அளிக்க வேண்டும்

தாய்தான் குழந்தைகளை இளம் வயதில் அவர்களை நெறிப்படுத்த முடியும். தன்னை ஒருவன் பேசினால், அவனை வெட்டி வா என்பதை விட, சிறிது நேரம் அமைதியாக இருந்தால் போதும். பிள்ளைகளை நல்வழியில் வளர்ப்பதற்கு அதிகமான பங்கு பெண்களுக்கு உள்ளது. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு பார்க்க வேண்டும். அதற்கு அவர்களை விளையாட விட வேண்டும்.

தேர்வில் தோல்வி அடைந்தால், அதற்காக கண்மூடித்தனமாக கண்டிக்கக் கூடாது. அடுத்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்ற ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதுபோல விட்டுக் கொடுத்து வாழ்வதற்கு பழக்க வேண்டும். தான் செய்யும் சிறிய தவறை கூட ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவத்தையும், குழந்தைகளுக்கு கொண்டு வர வேண்டும்.

இதுபோல பெண்கள் நினைத்தால் குழந்தைகளை நல்ல வீரர்களாக, ஆண் மகன்களாக, கல்வியாளர்களாக மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், தொழிலாளர் துறை ஆய்வாளர் ஜோதி லட்சுமி, கிராம உதய அமைப்பின் நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், பிரேமா, ஆறுமுக வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம உதய கிளை அலுவலக பொறுப்பாளர் முத்துச்செல்வன் நன்றி கூறினார்.


Next Story