தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்
கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை மீட்க வலியுறுத்தி தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை மீட்க வலியுறுத்தி தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் தர்ணா
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமம் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு கோவில் இடத்தை தனியார் சிலருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும், அதனை மீட்க வேண்டும் என்றும், இதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் கலெக்டர் நேரில் வந்தால் தான் எழுந்து செல்வோம் என்று அவர்கள் கூறினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்குமாறு கூறினர். அதன் பிறகு மனு கொடுத்துவிட்டு அவர்கள் சென்றனர்.
ஆலங்குளம் தாலுகா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து வடமலைப்பட்டி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், "வடமலைப்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடம் ரூ.2,500 வசூலித்தது மட்டுமல்லாமல் 8 மாதங்களாக குடிநீர் வழங்காமல் இருக்கும் பஞ்சாயத்து தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
உறுதிமொழி
முன்னதாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் ஆகாஷ் தலைமையில் சுதந்திரத்திற்காக தன்னுயிர் ஈத்த தியாகிகளை போற்றும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலியும், தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழியையும், காந்தியின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினையும் எடுத்துக் கொண்டனர்.