பெண் ஓட்டுனர்கள் மானியத்தில் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம்
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனர்கள் மானியத்தில் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர்(பொறுப்பு) ஆனந்தன் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர்(பொறுப்பு) ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆட்டோ வாங்க மானியம்
தற்போது தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் உள்பட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குகண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் ஒட்டுனர்கள்
அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியடையாத பெண் ஓட்டுனர்கள் தங்களது நலவாரிய உறுப்பினர் பதிவு அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் தங்களது புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம்
இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை எண்.1, நல்ல தண்ணீர்குளத்துபாதை தெரு, சேலம் மெயின்ரோடு, ஏமப்பேர், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓட்டுனர் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.