என்ஜின் பெண் டிரைவர்களுக்கு இலகுவான பணி வழங்க வேண்டும் -நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வைகோவிடம் கோரிக்கை
என்ஜின் பெண் டிரைவர்களுக்கு இலகுவான பணி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வைகோவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரெயில்வே வளர்ச்சிக்கான எம்.பி.க்களின் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜ்யசபா உறுப்பினர் வைகோவை எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் பெண் என்ஜின் டிரைவர்கள் பிரிவு உறுப்பினர்கள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெண் என்ஜின் டிரைவர்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு இலகுவான பணி வழங்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு அலுவலக பணி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த கோரிக்கைகள் ரெயில்வே வாரியத்தின் கொள்கை முடிவு சார்ந்து இருப்பதால், பெண் என்ஜின் டிரைவர்களின் நியாயமான இந்த கோரிக்கையை வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயம் வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, எஸ்.ஆர்.எம்.யூ. உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் என்ஜின் டிரைவர்கள் பிரிவு தலைவர் ரவிசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.