மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்ப பதிவு முகாம்
மாவட்டம் முழுவதும் 609 இடங்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க இருக்கிறது. இதையொட்டி பயனாளிகளை தேர்வு செய்வதற்கு ரேஷன்கடைகள் மூலம் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை வழங்கப்பட்டன. இதையடுத்து விண்ணப்ப படிவங்களை பதிவு செய்யும் முகாம் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1,157 ரேஷன்கடைகள், 6 லட்சத்து 67 ஆயிரத்து 171 ரேஷன்கார்டுகள் இருக்கின்றன. அதில் முதல்கட்டமாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 146 ரேஷன்கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. அதேபோல் 2-வது கட்டமாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 25 ரேஷன்கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விண்ணப்ப பதிவு நடக்கிறது.
விண்ணப்ப பதிவு முகாம்
இதையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் ரேஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று உரிமைத்தொகைக்கான விண்ணப்பம், முகாமில் பங்கேற்க வசதியாக டோக்கன் ஆகியவற்றை வழங்கினர். இதைத் தொடர்ந்து நேற்று முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் மொத்தம் 609 இடங்களில் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெண்களுக்கு விண்ணப்பங்களை நிரப்பி கொடுப்பதற்கு சுயஉதவிக்குழு, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் விண்ணப்பத்தை நிரப்ப தெரியாமல் வந்த பெண்களுக்கு நிரப்பி கொடுத்தனர். அதேபோல் வங்கி கணக்கு கணக்கு இல்லாத பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளரும் ஒவ்வொரு முகாமிலும் இருந்தனர்.
பெண்கள் ஆர்வம்
அந்த அலுவலர்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவையான ஆவணங்களை பெற்று, குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்வதற்கு தலா 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் பெண்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக காலை 9 மணிக்கே பெண்கள் ஆர்வமுடன் முகாமுக்கு வரத்தொடங்கினர். ஒவ்வொரு நபரிடமும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு, மின்கட்டண ரசீது ஆகிய விவரங்களை பெற்று ஆன்லைனில் பதிவு செய்தனர். ஆன்லைனில் பதிவு செய்ததும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை பெற்று பதிவை நிறைவு செய்தனர்.