துணிகள் துவைக்க அனுமதி கோரி பெண்கள் உண்ணாவிரதம்


துணிகள் துவைக்க அனுமதி கோரி பெண்கள் உண்ணாவிரதம்
x

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் துணிகள் துவைப்பதற்கு அனுமதி கோரி பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் துணிகள் துவைப்பதற்கு அனுமதி கோரி பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

சரவண பொய்கை

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் சரவண பொய்கை அமைந்துள்ளது. இங்குதான் பாலகனாக முருகப்பெருமான் அவதரித்தாக புராண செய்தி கூறுகிறது. எனவே, கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் பொய்கையில் நீராடுவது வழக்கம்.

இந்த பொய்கையில் இருந்து தினமும் காலையில் ஒரு வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து பலிபீடத்தில் ஊற்றக்கூடிய திருமஞ்சன நிகழ்ச்சியும் நடந்துவருகிறது.

கார்த்திகை தீப திருநாளின் நிறைவு நாளில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பொய்கையில் எழுந்தருளுவார். இத்தகைய சிறப்புகள் கொண்ட சரவண பொய்கை மாசுபடுவதை தவிர்க்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

பொய்கையில் பூட்டு

கடந்த 2017-ம் ஆண்டில் கோர்ட்டு உத்தரவின்பேரில் பொய்கையை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சோப்பு, ஷாம்பு போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது, துணிகள் துவைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் பிரதான நுழைவு பாதையை தவிர்த்து சரவண பொய்கையின் கரை சார்ந்த மேற்புறத்தில் உள்ள 3 வழிகளிலும் பூட்டு போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 18-ந்தேதி பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் 105 பேர் கைது செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதம்

நேற்று கிழத்தெரு, நடுச்சந்து குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தலைமுறை, தலைமுறையாக சரவண பொய்கையில் துணிகள் துவைத்தும், குளித்தும் வந்தோம். பொய்கையை முழுமையாக தூர்வரவில்லை. படிக்கட்டில் பாசி படியாமல் சுத்தமாக வைத்துகொள்ளாமலும், இரவு நேரங்களில் மீன்கள் பிடிப்பதை தடுக்காமலும், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்காமலும் சமீபத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துமடியும் அளவிற்கு பாதுகாக்க தவறிவிட்டனர்.

தற்போது மாசுபடுகிறது என்று கூறி பொய்கையை பூட்டிவிட்டனர். வளாகத்தில் உள்ள சலவை கூடம், குளியல் அறை போதுமானதாக இல்லை. ஆகவே பொய்கையில் பூட்டை திறந்து துணிகள் துவைப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றனர்.



Next Story