குடிபோதையில் அத்துமீறுபவர்களால் பெண்கள் அச்சம் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படுமா?


குடிபோதையில் அத்துமீறுபவர்களால் பெண்கள் அச்சம் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படுமா?
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் அங்கு மது அருந்திவிட்டு போதையில் ரகளை செய்பவர்களால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

வேலூர்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் அங்கு மது அருந்திவிட்டு போதையில் ரகளை செய்பவர்களால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

வேலூரில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திலிருந்தே இயக்கப்படுகிறது. இதே பகுதியில் உள்ள மண்டி வீதி, கிருபானந்த வாரியார் வீதிகளில் தான் முக்கிய மொத்த வியாபார வணிக நிறுவனங்கள் மற்றும் பிரமாண்ட காய்கறி மார்க்கெட்டான நேதாஜி காய்கறி மார்க்கெட் ஆகியவை செயல்படுகின்றன.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தனியார் மருத்துவமனையும் இந்த பகுதியில் செயல்படுகிறது. இங்கு சிகிச்சை பெறுவதற்காக வட மாநிலங்களில் இருந்தும் வங்காள தேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள்

இதனால் பழைய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் பழைய பஸ் நிைலயத்தை ஒட்டிய சந்தில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளதால் அங்கு மது குடிக்க வருபவர்கள் போதையில் பஸ் நிலைய பகுதிக்குள் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

மதுவாங்கும் மதுபிரியர்கள் அங்கேயே பாட்டிலை திறந்து குடிக்கின்றனர். அவர்கள் போதையில் தள்ளாடியபடி சாலையில் விழுந்து உறங்குகின்றனர். மேலும், மண்டித்தெருவில் இரவு நேரங்களில் கடைகள் முன்பு கும்பலாக அமர்ந்து மதுகுடிப்பது வாடிக்கையாகி வருகிறது. குடித்த பின் காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் மதுபோதையில் தங்களது உடைகள் விலகி அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் அநாகரீகமாகவும் நடக்கின்றனர்.

காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் அச்சத்துடன் பஸ் நிலையங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் மதுபோதையில் அவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு பெண்களை கேலி, கிண்டல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஸ்கள் செல்வதற்கு இடையூறாக சாலையில் மோட்டார்சைக்கிள்களை நிறுத்துகின்றனர். கடையின் அருகிலேயே மதுகுடித்து விட்டு ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கிறது. இதை ரோந்து செல்லும் போலீசார் கண்டு கொள்வதில்லை. அவர்கள் அந்த பகுதியை கண்டும், காணாதது போன்று கடந்து செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வழிப்பறி

பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் திருடப்படும் சம்பவங்களும் நடக்கிறது. மதுபோதையில் ஆங்காங்கே சாலையில் தூங்குபவர்களின் செல்போன்களை மர்மநபர்கள் திருடிச் செல்கின்றனர். மேலும் அவர்களிடம் வழிப்பறியும் நடக்கிறது.

இதுதவிர கடை மூடப்பட்ட பின்னரும், கடை திறக்கும் முன்னரும் சிலர் கடையின் அருகிலேயே திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்வதும் வாடிக்கையாகி உள்ளது.

பழைய பஸ் நிலையம் அருகே மண்டித்தெரு மற்றும் நேதாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. அங்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தப்பணிகளில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அதிகாலை முதல் தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்கள் களைப்பின் மிகுதியில், வாங்கும் ஊதியத்தை மதுபாட்டிலுக்கு செலவிடும் நிலை ஏற்படுகிறது. முறையாக வீடுகளில் பணத்தை கொடுக்காமல் மதுக்கடைகளில் பணத்தை இழந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வளர்ந்து வரும் மாநகரில் இந்த டாஸ்மாக் கடைகள் நகரின் வளர்ச்சிக்கு பல வகைகளில் குந்தகமாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பல பெண்கள் பஸ் நிலையங்களுக்கு வருவதற்கே அச்சப்படும் சூழல் இருந்து வருகிறது. இது தவிர ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் காணப்படும் 3 டாஸ்மாக் கடைகளால் தினமும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு மது வாங்க செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட விரைவில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அடிதடி, மண்டை உடைப்பு போன்றவற்றிலும் குடிமகன்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடித்து விட்டு சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து கலாட்டாவில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். எனினும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நகரில் இருக்கும் இந்த கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாற்ற வேண்டும்

வேலூர் அரியூர் விஸ்வநாதநகரை சேர்ந்த சரோஜா:-

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இவ்வாறு அதிக மக்கள் வந்து செல்லும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நகரில் உள்ள கடைகள் அனைத்தும் சாமானிய மக்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் வர்த்தகம் நடைபெறும் இடங்களில் அமைந்துள்ளது.

கூலி வேலை செய்பவர்கள் தங்கள் ஊதியத்தை வீட்டுக்கு கொடுக்காமல் டாஸ்மாக் கடைகளில் கொடுக்கின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடைகள் இருந்தால் 10-ல் 2 பேர் தான் கடையை தேடிச் சென்று மது வாங்குவார்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் வருமானத்தை குடும்பத்திற்காக செலவிடுவார்கள். எனவே கடைகளை ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும். அதே வேளையில் டாஸ்மாக் கடைகள் நகரில் இருப்பதால் ஏராளமானவர்கள் குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகளும் அடிமையாகும் சூழல் எழுந்துள்ளது. தற்போது பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மதுபாட்டில்கள் வீச்சு

வேலூர் வேலப்பாடியை சேர்ந்த உமாபதி:-

வேலூர் கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை மது குடிக்கும் பாராக குடிமகன்கள் மாற்றி வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களிலேயே கோட்டையின் மதில் சுவரில் ஆங்காங்கே உட்கார்ந்து மது குடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் கோட்டையில் பள்ளி மாணவ -மாணவிகள் மது குடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் மது குடித்து விட்டு மதுபோதையில் திளைத்து நடனமாடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களை வைரலானது.

கோட்டையின் அருகே டாஸ்மாக் கடைகள் இருப்பதால் எளிதாக மது வாங்கி குடிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. வாங்குபவர்கள் மதுபாட்டில்களை குடித்துவிட்டு அகழியில் வீசுகின்றனர். பூங்காவிலும் மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே இந்த கடைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு மாற்ற வேண்டும்.


Next Story