உதவி மையங்களில் குவிந்த பெண்கள்
குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அதற்கான காரணம் அறிய கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் குவிந்தனர். ஆனால் சர்வர் பிரச்சினையால் என்ன காரணம்? என்பதை அறிய முடியாமல் தவித்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அதற்கான காரணம் அறிய கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் குவிந்தனர். ஆனால் சர்வர் பிரச்சினையால் என்ன காரணம்? என்பதை அறிய முடியாமல் தவித்தனர்.
மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கள ஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு கடந்த 15-ந் தேதிக்கு முன்பே ஒரு ரூபாய், 10 பைசா அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. மேலும் செல்போனில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. குறுஞ்செய்திகள் வந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதவி மையங்கள்
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் அதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் மீண்டும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த உதவி மையத்திலும், நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய தாலுகா அலுவலகம் போன்றவற்றில் அமைக்கப்பட்டு இருந்த உதவி மையங்களிலும் ஏராளமானோர் திரண்டனர். இந்த மையங்களில் மொத்தம் 22 பேர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களுடன் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். அங்கு திரண்ட பெண்கள் தங்களது கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தின் நிலை குறித்து பார்த்தனர்.
சர்வர் பிரச்சினை
உதவி மைய ஊழியர்கள் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளை பொதுமக்களிடம் தெரிவித்தனர். தகுதியானவர்களை அந்த குறைபாடுகளை சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர். இதுபோல் இ-சேவை மையங்களிலும், சில தனியார் கம்ப்யூட்டர் மையங்களிலும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலக உதவி மையத்தில் 5 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். இங்கு சிறிது நேரத்தில் சர்வரில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன காரணத்தால் உரிமைத்தொகை கிடைக்கவில்லை? என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
உதவி மையங்களில் இருந்த பணியாளர்கள் ஒவ்வொருவரின் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், செல்போன் ஆகியவற்றை பதிவேடுகளில் பதிவு செய்து, 'சர்வர் பிரச்சினை சரியானதும் உரிமைத் தொகை கிடைக்காத காரணம் என்ன? என்பதை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிப்போம்' என்று கூறி அனுப்பி வைத்தனர். இதுபோல் தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் குவிந்திருந்த பெண்கள் உரிமைத்தொகை கிடைக்காத காரணம் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.
வங்கிகளிலும் கூட்டம்
இதே போல் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் வந்த பணத்தை எடுப்பதற்கு நேற்று வங்கிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்றதால் வங்கிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.