கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட வி்ண்ணப்ப நிலை அறிய திரண்ட பெண்கள்
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிவதற்காக பெண்கள் திரண்டனர். சர்வர் பழுதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அனுப்பப்பட்டனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிவதற்காக பெண்கள் திரண்டனர். சர்வர் பழுதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அனுப்பப்பட்டனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளான கடந்த 15-ந் தேதியன்றே அவர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி திருவண்ணாமலை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள உதவி மையத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிவதற்காக திரண்டனர்.
பின்னர் அவர்கள் தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பு நீண்ட வரிசையில் நின்று ஒருவர், பின் ஒருவராக உதவி மையத்தில் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் தங்களின் ரேஷன் கார்டு எண்ணை தெரிவித்தனர். அப்போது அலுவலர்கள் அவர்களிடம் உள்ள செல்போன் செயலியில் ரேஷன் கார்டு எண்ணை உள்ளீடு செய்ததும் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு உள்ளதா, நிராகரிக்கப்பட்டு உள்ளதாக, பரிசீலனையில் உள்ளதா, எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் வந்தது.
இதில் மேல்முறையீடு செய்ய இயலக் கூடிய நபர்களிடம் இ- சேவை மையம் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை செய்கின்றனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முதல் நாளான நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் இணையதள சர்வர் பிரச்சனை ஏற்பட்டது.
சர்வர் பிரச்சினை
இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தின் முன்பு உள்ள மரத்தடியில் காத்திருந்தனர். தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி அங்கு வந்து பொதுமக்களிடம் பேசுகையில்,'' இணையதள சர்வர் பிரச்சனையில் உள்ளதால் டோக்கள் வழங்கப்படும் அதனை வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) வந்து தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்கள் டோக்கனை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.