கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் மற்றும் முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வருகிற ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.


Next Story