காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

குடிநீர் வசதி செய்து தரகோரி காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

குடிநீர் வசதி செய்து தரகோரி காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

சாலை மறியல்

வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த காமராஜர்காலனியில் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் முறையான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து காமராஜ்காலனி பகுதி பெண்கள் வெம்பக்கோட்டை-சங்கரன்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் பஸ்மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் காலிக்குடங்களுடன் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெம்பக்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) செல்வராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அடிப்படை வசதி, முறையான குடிநீர் வினியோகம் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story