அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு
ஆடி கடைசி செவ்வாயையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தினர்.
ஆரல்வாய்மொழி:
ஆடி கடைசி செவ்வாயையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தினர்.
கொழுக்கட்டை படைத்து வழிபாடு
ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். எனவே ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு பெண்கள் சென்று வழிபடுவார்கள்.
இந்த ஆண்டின் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் வந்து கோவில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை படைத்து அம்மனை வழிபட்டனர். மதியம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நீண்ட வரிசையில் பெண்கள் நின்று அவ்வையார் அம்மனை தரிசனம் செய்தனர்.
பெண்கள் கூட்டம்
முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவிலில் நேற்று ஆடிபெருங்கொடைவிழா நடைபெற்றது.இதையொட்டி காலையில் ஆரல்வாய்மொழியிலிருந்து கோவிலும் பால் குடங்களுடனும் பறக்கும் காவடியுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் அன்னதானமும் நடந்தது. மாலையில் பூ படைப்பு, ஊட்டு படைப்பு மற்றும் பூக்குழி இறங்குதலும் நடைபெற்றது. கோவில் கொடைவிழாவில் பத்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலிலும் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.