காவேரிப்பட்டணம் அருகே பெண் கொடூரக்கொலை; உறவினர்களிடம் போலீசார் விசாரணை


காவேரிப்பட்டணம் அருகே பெண் கொடூரக்கொலை; உறவினர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழுத்தை அறுத்து கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த ராமேநத்தத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 51). இவருடைய கணவர் ராஜேந்திரன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பழனியம்மாள், அவருடைய தாய் நாகம்மாள் (97) என்பவருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பழனியம்மாள் வீட்டருகே உள்ள அவர் தந்தை சமாதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பழனியம்மாள் சகோதரியின் மகன் ராஜா காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பழனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

நிலத்தை அபகரிக்க கொலை

கொலை செய்யப்பட்ட பழனியம்மாளும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (55), வேலு (50), மாது (48) ஆகியோரும் உறவினர்கள் ஆவர். அவர்கள் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். இந்தநிலையில் பழனியம்மாள் தனக்கு சொந்தமான 1.87 ஏக்கர் நிலத்தை, தனது சகோதரி சுசீலா என்பவருக்கு தான பத்திரமாக கொடுத்துள்ளார்.

இதற்கு சண்முகம், வேலு, மாது ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தை சுசீலாவுக்கு கொடுக்க கூடாது என்று தகராறு செய்துள்ளனர். இந்தநிலையில் தான் பழனியம்மாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனால் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பழனியம்மாளின் உறவினர்களான சண்முகம், வேலு ஆகியோரை பிடித்து 2 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story