கல்லால் தாக்கி பெண் கொலை
கல்லால் தாக்கி பெண் கொலை
காங்கயம்
காங்கயம் அருகே பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்து தனியாக வந்த பெண் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் நிறுவன பெண் தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே வஞ்சிபாளையம் கரியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருடைய மனைவி ரேவதி (வயது 35). இவர்களது மகன் ஹரிஷ் (8). கடந்த சில ஆண்டுகளாக ரேவதியின் கணவர் ரத்தினசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.
இதனால் ரேவதி குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ரேவதி வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த பனியன் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்கு சென்று வந்தார். தினமும் வேலை முடிந்ததும் காட்டுப்பாதை வழியாக வீட்டிற்கு நடந்து வருவதை ரேவதி வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரேவதி நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதனால் ரேவதியின் கணவர் ரத்தினசாமி ரேவதியின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு ரேவதி அங்கு வந்தாரா? என்று விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவாகி விட்டதால் ரேவதியை அவருடைய உறவினர்கள் தேடவில்லை.
ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்
அதைத்தொடர்ந்து ரேவதியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்றுகாலை நேரத்தில் இருந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ரேவதி வேலை முடிந்து நடந்து வரும் காட்டுவழிப்பாதையில் சென்று பார்ப்போம் என முடிவு செய்து ரேவதி வரும் வழியை பார்த்து கொண்டு வந்தனர். அப்போது ரேவதி நடந்து வரும் காட்டுவழி பாதையில் கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் ரேவதியின் மதிய உணவு பை மற்றும் ரேவதியின் காலணி ஆகியவை கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதியின் உறவினர்கள் அப்பகுதியில் சுற்றி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி.கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள முட்புதர் அருகே ரேவதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் மற்றும் போலீசார் வந்து ரேவதியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கற்பழித்து கொலையா?
பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் திருப்பூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் ரேவதியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து ேமாப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.
இதற்கிடையில் ரேவதியின் உறவினர்கள் அங்கு திரண்டனர். ரேவதியை கொன்ற கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மிக விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து ரேவதியின் உறவினர்கள் உடலை எடுத்துச்செல்ல அனுமதித்தனர்.
பின்னர் போலீசார் ரேவதியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவருடைய செல்ேபானில் கடைசியாக பேசிய நபர் யார்? என செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
----