குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்-கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்


குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்-கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்
x

குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.

சேலம்

கலந்தாய்வு கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஊராட்சிகளின் நிர்வாகம், ஊராட்சி மன்ற தலைவர்களின் அடிப்படை கடமைகள், வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

கிராம ஊராட்சி நிர்வாக கட்டமைப்பின் செயல்பாடுகளை சரியாக வழி நடத்தவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமைகள், விருப்ப கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்திடவும், நடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் 120 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

சுதந்திரமாக...

ஊராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் தலையீடு ஊராட்சி நிர்வாகத்தில் இருத்தல் கூடாது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் பலகை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இடம் பெற வேண்டும்.

கிராம ஊராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தான விவரத்தை ஊராட்சி மன்ற தலைவர் அறிந்திருக்க வேண்டும். ஊராட்சி தொடர்பான அனைத்து விதமான வரவு, செலவு விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

நடவடிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வீடுகளும் விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 15-வது ஒன்றிய நிதிக் குழு மான்ய திட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகளை 3 மாத காலத்திற்குள் முடித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழரசி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story