பெண் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்


பெண் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்
x

பெண் ஊராட்சி தலைவர்கள் உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து பெண் தலைவர்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பெண் ஊராட்சி தலைவர்கள் உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து பெண் தலைவர்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேசினார்.

பஞ்சாயத்து பெண் தலைவர்கள்

குமரி மாவட்ட ஊராட்சித்துறை சார்பில் கிராம பஞ்சாயத்து பெண் தலைவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பஞ்சாயத்து தலைவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பெண் பஞ்சாயத்து தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

50 சதவீத இட ஒதுக்கீடு

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73-வது திருத்தத்தின்படி பெண்கள் சுயமாக முடிவெடுத்தல், சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்தல், சமுதாயத்தில் நலிந்த மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையதாகக் கருதப்பட்டு, ஊராட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பதவியிடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்டம் 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை

ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சித் தலைவர்கள் தங்களுடைய உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 7,135 ஆதி திராவிடர் மக்களுக்கும், 709 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக மொத்தம் 7,844 நபர்களுக்கு முழுமையாக வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2,875 ஆதி திராவிடர் மக்களுக்கும், 114 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 2989 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4,855 (61.9 சதவீதம்) மக்களுக்கு வேலை வழங்கப்படாத நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் ஆதி திராவிட பழங்குடியின மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரத வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட விண்ணப்பிக்கப்பட்டு இருப்பின் உடனடியாக முன்னுரிமை வழங்கி வேலை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.

கூட்டத்தில் உதவி இயக்குனர் (கிராம ஊராட்சிகள்) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story